கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகிகள் 
க்ரைம்

திருச்சி கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நாதக நிர்வாகிகள் 2 பேர் கைது: தலைமறைவான 5 பேருக்கு வலை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம், புலிவலம், கரட்டாம்பட்டியில் அரசு நிலத்தில் அரசு அனுமதியோடு, டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை மதுராபுரியை சேர்ந்த தங்கவேல் என்பவர் 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி இணைச் செயலாளர் ப.அருண்குமார் (32), மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர் த.செல்லதுரை (35), உறுப்பினர் சு.ராஜாங்கம் (32) ஆகியோர், அக்.3-ம் தேதி உரிய அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வருவதாக கூறி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

தங்கவேல் பணம் தராததால் ஆத்திரமடைந்த அருண்குமார் உள்ளிட்ட 7 பேர் அக்.4-ம் தேதி கல்குவாரி அலுவலகத்துக்கு நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும், கரிகாலன் வளையொலி என்ற யூடியூப் சேனலில் திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டியில் அரசு அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வருவதாகவும் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த உள்ளதாக வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தங்கவேல் புலிவலம் காவல் நிலையத்தில் அக்.13-ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் புலிவலம் போலீஸார் நாதகவைச் சேர்ந்த அருண்குமர், செல்லதுரை, ராஜாங்கம் மற்றும் ஆனந்தன், தனபால், வினோத் மற்றும் கேமிரா மேன் ஆகியோர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, செல்லதுரை, ராஜாங்கம் ஆகியோரை இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நாதக நிர்வாகி அருண்குமர், ஆன்தன், தனபால், வினோத், கேமிரா மேன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT