க்ரைம்

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை: சென்னையில் சினிமா உதவி இயக்குநர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததாக சென்னையில் சினிமா உதவி இயக்குநர் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “சென்னையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுவதாக சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடபழனி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு அசோக் நகர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பாக்கெட்டுகளை இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை குறிவைத்து கும்பல் ஒன்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர், அசோக் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், அசோக் நகர் 92-வது தெருவில் வசித்து வரும் சினிமா உதவி இயக்குநரான தர்ஷன் (21) என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையின் பின்னணியில் இருந்து வருவது தெரியவந்தது. இது குறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்ஷனை நேற்று இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் 29 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தொடர்புகள் குறித்து தர்ஷனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT