க்ரைம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என கூறி நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி அதிகாரிகள் என கூறி ரூ.9 லட்சம் பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுஷர் பாய். இவர், சென்னை சவுகார்பேட்டையில் சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த 5 பேர், தங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர். உரிய அனுமதி இன்றி நகைப்பட்டறை செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, நாங்கள் சோதனை செய்ய வேண்டும் என கவுஷர் பாயிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, நகைப்பட்டறையை சோதிக்க உரிமையாளர் அனுமதி அளித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத 5 பேரும், ‘‘நாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் அல்ல வழக்கறிஞர்கள். நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.7 லட்சம், வழக்கறிஞர் கட்டணம் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் தரவேண்டும். இல்லை என்றால் நகைப்பட்டறையை நடத்த முடியாது’’ என மிரட்டியுள்ளனர். கவுஷர் பாய்க்கு தமிழ்சரியாக தெரியாததால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, நகைப்பட்டறை ஊழியர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து யானைகவுனி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் வருவதை பார்த்த 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். 2 பேர் தப்பிய நிலையில், 3 பேர் பிடிபட்டனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பிடிபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளும் இல்லை, வழக்கறிஞர்களும் இல்லை என தெரியவந்தது.

அவர்களை கைது செய்து விசாரித்ததில், மூன்று பேரும் எம்கேபி நகரை சேர்ந்த அலி (30), முகமது ஆசிப் (21), ஜாபர்சாதிக் அலி என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அலி மீது, இந்து அமைப்புகளை சேர்ந்த இரு தலைவர்களை மிரட்டிய வழக்கு உள்ளது. மேலும், கோவையில் பயங்கரவாத செயலில் ஈடுபட முயன்ற வழக்கிலும் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனபோலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT