சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்ட 30 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஏற்கெனவே சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்பு உடைய திருவேங்கடம் என்பவர்,போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக உள்ளசம்போ செந்தில் மற்றும் மொட்டைகிருஷ்ணனை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ரவுடிகளான நாகேந்திரன், சம்போ செந்தில், அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 30 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர்.
பிரபல ரவுடியான ஆற்காடுசுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக, அவரது சகோதரர் பொன்னை பாலு, பெண் தாதாவான அஞ்சலை உள்ளிட்டோர் ஓராண்டாக சதி திட்டம் தீட்டி காத்திருந்தது, ஆம்ஸ்ட்ராங் கூடவே இருந்துஅவரை கொல்ல திட்டம் தீட்டியஅஸ்வத்தாமன், வீட்டை காலிசெய்வது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்- சம்போ செந்தில் இடையிலானபிரச்சினை, சில அரசியல் கட்சியினருக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையிலான முன்பகை ஆகியவை குறித்து குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அவருடன்முன்விரோதத்தில் இருந்த எல்லாதரப்பினரும் ஒன்றாக சேர்ந்து சதிதிட்டம் தீட்டி, சென்னை பெரம்பூர்பகுதியில் உள்ள வீட்டு அருகிலேயே ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிபடுகொலை செய்தது உள்ளிட்டஅனைத்து விவரங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்,இந்த கொலைக்கு பண உதவிசெய்தது தொடர்பான வங்கி ஆவணங்கள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி,கையெறி குண்டுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்றவைசான்று ஆவணங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்ட பிறகு, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.