க்ரைம்

சென்னை | ரூ.20 ஆயிரம் லஞ்ச புகார்; காத்திருப்போர் பட்டியலுக்கு எஸ்.ஐ. மாற்றம்: நகை திருடிய யோகா மாஸ்டர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ரூ.20 ஆயிரம் லஞ்சம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கே.கே.நகர் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்சங்கர். இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 3-ம் தேதி பீரோவில் இருந்த நகையை சரிபார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், புகார் குறித்துவிசாரிக்க, உதவி ஆய்வாளர்ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தங்கம் விற்று வைர நகை: இதனிடையே, சங்கர் வீட்டில் நகைகளை திருடியதாக, அவரது வீட்டுக்கு யோகா கற்றுக் கொடுக்க வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்

வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ பகுதியை சேர்ந்த யோகா மாஸ்டர் காயத்ரி (58), கடந்த 2 மாதமாக யோகா கற்றுக் கொடுக்க சங்கர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்தமாதம் சங்கர் வீட்டுக்கு வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது.

அதைப் பார்த்த காயத்ரி, பீரோவில் இருந்து 40 பவுன் நகைகளை எடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வைர செயின் வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT