குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற சிறுமி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து சிறுமியின் பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், சிறுமியை ஊட்டி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் கடந்த 30-ம் தேதி அவர்கள் சென்னை வந்த போது கல்லூரி மாணவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், இது குறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார், கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருவதும், பள்ளிப் பருவத்தில் இருந்தே அவரும் அச்சிறுமியும், காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.