விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கடந்த27-ம் தேதி நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாத நிலையில், தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, மோகன்ராஜ் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்ராஜ் கடந்த 28-ம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோகன்ராஜை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இதை வலியுறுத்தி வளத்தி காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பாமகவினர் குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைதுசெய்து, போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே, உயிரிழந்த மோகன்ராஜின் தந்தை வரதன், வளத்தி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரகுமார், தேவராஜ், ரங்கநாதன், அவரது மனைவி கவுரி, சித்தேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், கீழ் செவலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டம், ஏழுமலை,முருகன், ராமதாஸ்,லோகநாதன், சின்னப்பன், ராஜி, ஜெயராமன் சிவலிங்கம் ராதா கிருஷ்ணன், சபாபதி,இளங்கோ, கிருஷ்ணன், தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 19 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்: இதற்கிடையே விவசாயி மோகன்ராஜ் தற்கொலை சம்பவம்தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற விவசாயி தேவனூர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாயத்துக்கான நீர்வரத்து வாய்க்கால் உள்ள நீர் ஓடையையும், சின்னதாளிகள் ஏரி ஆகிய இரு அரசு நீர்வழி புறம்போக்கு பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்துவந்துள்ளார். இதனால் நீர் வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் மேல்மலையனூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மோகன்ராஜுக்கு காலஅவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கடந்த 27-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. மேலும், மேல்மலையனூர் வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் அக்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய உள்ளதாகவும், இந்த தகவல் கடிதம் சம்பந்தப்பட்ட மோகன்ராஜுக்கு அனுப்பி உள்ளதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் மோகன்ராஜ் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் வருத்தம்அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக மக்களோடு களத்தில் நின்று போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சிக்குஎன்றும் சுயநலப் போக்கு இருந்ததில்லை. தனிநபரைப் பாதிக்கும்வண்ணம் மார்க்சிஸ்ட் கட்சி எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.