பெரம்பலூர்: சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திருச்சியைச் சேர்ந்த மரியம்பிச்சை பொறுப்பேற்றார். அதன்பின், 23.05.2011 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஆனந்தன் (27) என்பவர் ஓட்டினார்.
பெரம்பலூரை அடுத்த திருவிளக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை கார் முந்திச் செல்ல முயன்றது. அப்போது, லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியதில் பலத்த காயமடைந்த அமைச்சர் மரியம்பிச்சை உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த வெங்கடேஷ், மாதேஸ்வரன், கார்த்திகேயன் மற்றும் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கார் ஓட்டுநர் ஆனந்தன், கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ஆந்திராவைச் சேர்ந்த நியமத்துல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், விபத்துக்கு காரணமான ஓட்டுநர்கள் ஆனந்தன், நியமத்துல்லா ஆகியோருக்கு தலா 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்