க்ரைம்

ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: அசாம் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற அசாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

குளச்சலில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த இளைஞர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து கொடுத்த தகவலின் பேரில், குளச்சல் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள ஒரு ஐஸ் ஆலைக்குள் புகுந்து கொண்டார். போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.

விசாரணையில், அவர் அசாம் மாநிலம் நரயன்புர் பகுதியை சேர்ந்த சம்சுல் அலி (22) என்பது தெரியவந்தது. இவர் 4 நாட்களுக்கு முன்பு சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடி வேலைக்கு வந்துள்ளார்.

குளச்சல் துறைமுகத்தில் வேலைபார்க்கும் தனது உறவினரை பார்க்க வந்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றுள்ளார். இதையடுத்து, சம்சுல் அலியை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT