சென்னை: அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அஞ்சல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா போஸ்ட் அலுவலகத்திலிருந்து பார்சல் அனுப்புவதாக பொதுமக்களுக்கு மோசடி கும்பல் குறுஞ்செய்தியை அனுப்புகிறது. முகவரி சரி இல்லாததால் பார்சல் டெலிவரி ஆகவில்லை என தெரிவிக்கப்படும். முகவரியை சரியாக பதிவிடுமாறு கூறி ஒரு லிங்க்கை மோசடிக் கும்பல் அனுப்பி வைக்கும்.
அதைத் தொடர்ந்து அஞ்சல் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஓர் அழைப்பு வரும். வந்துள்ள பார்சல் திருப்பி அனுப்பப்படாமல் இருக்க லிங்க்கை கிளிக் செய்யவும் எனத் தெரிவிக்கப்படும். லிங்க்கை கிளிக் செய்ததும் போலி இணையதளத்துக்கு சென்று ரூ.80 முதல் ரூ.100 வரை என சிறிய தொகை செலுத்தக் கேட்கப்படும். சிறிய தொகை தானே என நினைத்து நாம் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்து பணம் அனுப்பியதும், அடுத்த சில நொடிகளில் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடிக் கும்பல் எடுத்துவிடும்.
அஞ்சல் துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களிடம் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை கேட்பதில்லை. மேலும், எதிர்பாராத குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்தால் அவற்றின் பின்னணியை ஆராய அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும். அத்துடன்,காவல் துறை மற்றும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவிடமும் புகார் அளிக்கவேண்டும். எனவே, தபால் துறை பெயரில் வரும் குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.