சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தன் தாயாருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சிறுமியின் தாயாருடன் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வளர்ப்புத் தந்தையாக இருந்த அந்த இளைஞர் கடந்தாண்டு நவ.1-ம் தேதியன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்து வந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ். அனிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.