க்ரைம்

கரூரில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பைக்; இறங்கி ஓடியதால் உயிர் தப்பிய இளைஞர்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதை ஓட்டிவந்த இளைஞர் இறங்கி ஓடியதால் உயிர் தப்பினார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த கட்டாரி கவுண்டனூரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தினேஷ்குமார் (26). இவர் வேலாயுதம்பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபல நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கை ரூ.1.47 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

இந்த வாகனத்தில் நாள்தோறும் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார் தினேஷ்குமார். இன்றும் (செப். 25ம் தேதி) வழக்கம் போல அவர் தனது வாகனத்தில் வீட்டிலிருந்து வேலாயுதம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் திருகாம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்துவிட்டு சுதாரித்த தினேஷ்குமார், பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடியுள்ளார். அடுத்த சில நொடிகளில் பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பைக் முற்றிலும் எரிந்துவிட்டது. வாங்கிய 6 மாதத்திற்குள் எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் எலெக்ட்ரிக் பைக் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT