சென்னை: மும்பை போலீஸ் பேசுவதாகக் கூறி, சென்னையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகராய நகர் கண்ணதாசன் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற டிஜிபி-யான ஸ்ரீ பாலின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). நேற்று டாக்டர் கமலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மும்பையில் இருந்து டிராய் அதிகாரி பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். சட்டவிரோதமான செயல்களுக்கு இந்த செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த செல்போன் எண்ணை பிளாக் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், தான் மும்பை போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு, “உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. அதற்காக ரூபாய் 90 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தால், உங்களுடைய பண பரிவர்த்தனை விவரங்களை சரி பார்த்துவிட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்குக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு பயந்து போன கமலி ஸ்ரீபால், ஜி-பே மூலம் ரூ. 90 ஆயிரத்தை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். பிறகு இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்தபோதுதான் அது சைபர் க்ரைம் மோசடி கும்பலின் கைவரிசை என அவருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் கமலி ஸ்ரீபால் அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.