சுப்பையா பாண்டியன் 
க்ரைம்

பல்கலை. போலி சான்றிதழ் விவகாரம்: சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் போலி சான்றிதழ்கள் தயாரித்தது தொடர்பாக சங்கர் தீட்சிதர் (37), நாகப்பன் (50) ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்து, அருட்பிரகாசம் (34) என்பவரை கைது செய்த போலீஸார், போலி முத்திரை, போலி அடையாள அட்டை மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்களை கைப்பற்றினர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு, திருச்சி குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் ஏஜென்ட்போல செயல்பட்டது தெரியவந்தது. இவர், அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் பொறுப்பு வகிக்கிறார். நேற்று முன்தினம் இரவு சிபிசிஐடி போலீஸார் திருச்சி சென்று சுப்பையா பாண்டியனை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில், சுப்பையா பாண்டியன் மூலம் 300-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்கள் பெற்றது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT