க்ரைம்

திருச்சி அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை: போலீஸ் விசாரணை

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியில் பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தர்ராஜன் (33). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டு மொட்டை மாடியில் இன்று (செப்.13) காலை சுந்தர்ராஜன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதைப் பார்த்த அவரது சித்தப்பா, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனே அங்கு விரைந்து வந்த திருவெறும்பூர் டிஎஸ்பி-யான ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார், சுந்தர்ராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, திருச்சி எஸ்பி-யான வருண்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோப்ப நாய் லீலி உதவியுடன் போலீஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவெறும்பூர் போலீஸார், சுந்தர்ராஜன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT