முனியராஜ்

 
க்ரைம்

ராமேசுவரத்தில் 12-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

ராமேஸ்வரம் ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம் நகராட்சி சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள பர்வதவர்த்தினி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (21) என்ற இளைஞர் அம்மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும் அம்மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துளளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து முனியராஜன் வீட்டிற்குச் சென்ற மாணவியின் தந்தை அவரைக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை காலை மாணவி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முனியராஜ் வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார் ஆனால் மாணவி மறுத்ததால், ஆத்திரம் அடைந்த முனியராஜ் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் துறைமுக காவல் நிலையப் போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய முனியராஜை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான மாணவியின் உறவினர்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கொலையாளிக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், என வற்புறுத்தினர். காதலிக்க மறுத்ததால் 12-ம் வகுப்பு பயிலும் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்வு ராமேசுவரம் தீவுப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT