நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்டம் தோவாளையில் பத்திரப்பதிவில் முறைகேடு செய்ததாக பெண் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(33). இடலாக்குடியில் சார் பதிவாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், தோவாளை சார் பதிவாளர் மேகலிங்கம் விடுமுறையில் இருந்ததால், அந்தப் பணியையும் சேர்த்து கவனித்து வந்தார்.
இந்நிலையில், தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல், நிலம் சார்ந்த பத்திரங்கள் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், தோவாளை சார் பதிவாளர் மேகலிங்கத்தின் கம்யூட்டர் ஐடி மூலம் பதிவுகள் நடைபெற்றிருந்தன.
விடுமுறையில் சென்றபோது... விடுமுறை முடிந்து பணிக்குவந்த தோவாளை சார் பதிவாளர்மேகலிங்கம், போதிய ஆவணமின்றியும், தனது கம்ப்யூட்டர் ஐடியைப் பயன்படுத்தியும் பத்திரப் பதிவு நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு சைபர் க்ரைம் போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
விசாரணையில், சார் பதிவாளர் சுப்புலட்சுமி, தனது அலுவலக உதவியாளராக இருந்த, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தனராஜ் (50) என்பவரின் உதவியுடன் பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேட்டில் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்வின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஜாமீனில் விடுவிப்பு: இதையடுத்து, சுப்புலட்சுமி, தனராஜ், நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்வின் ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். சுப்புலட்சுமி கர்ப்பிணியாக இருப்பதால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.