கரூர்: கரூரில் இளைஞர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோட முயன்ற 2 பேர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 பேரை கைது செய்து, தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமம் கம்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (20). திருப்பூரில் வேலை பார்த்து வந்த ஜீவா, விடுமுறைக்கு கரூர் வந்திருந்த நிலையில் ஜூலை 22 முதல் அவரைக் காணவில்லை. இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஜீவாவின் அம்மா சுந்தரவள்ளி ஜூலை 27-ல் புகார் அளித்தார். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த போலீஸார், ஜீவாவுடன் கடைசியாக செல்போனில் பேசிய பாண்டீஸ்வரனை (20) கடந்த 27-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.
பசுபதிபாளையம் மற்றும் காந்திகிராமத்தைச் சேர்ந்த தர்மா என்கிற கிருஷ்ணசாமி, சசிகுமார், மோகன்ராஜ் 3 பேரும் நண்பர்கள். கடந்த 2021-ம் ஆண்டு மூவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். ஜீவா தான் அந்த மதுவை வாங்கி வந்துள்ளார். ஆனால், மதுவை அருந்திய சற்று நேரத்தில் மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். சசிகுமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். தர்மா மது அருந்தாததால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த இவ்வழக்கில் தர்மா கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்துள்ளார். இவ்வழக்கில் ஆகஸ்ட் 2-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனிடையே மோகன்ராஜ் இறப்பு குறித்து சசிகுமார் தர்மாவிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர், தான் எதுவும் செய்யவில்லை எனவும் ஜீவாதான் மதுவில் விஷம் கலந்து கொடுத்தாகவும் கூறியதாக தெரிகிறது. மேலும், சசிகுமார் கனவில் மோகன்ராஜ் வந்து தனது சாவிக்கு பழிக்குப் பழி வாங்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சசிகுமாரை தலையை வெட்டிக்கொல்வது போல பதிவிட்ட ஜீவா, அதை சசிகுமாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தனது நண்பர் பாண்டீஸ்வரன் மூலம் ஜீவாவை ஜூலை 22-ம் தேதி தனியாக ஒரு இடத்துக்கு வரவைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அதன்பிறகு உடலை 7 துண்டுகளாக வெட்டி தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் புதைத்துள்ளார்.
பாண்டீஸ்வரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்ததை அடுத்து சசிகுமார் (27) உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் சசிகுமார் உள்ளிட்ட இருவரையும் ஜீவாவை புதைத்த இடத்துக்கு அழைத்துச் சென்று உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அவரது உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ள இடத்தை காட்டுவதற்காக சசிகுமார், மதன் ஆகிய இருவரையும் தாந்தோணிமலை போலீஸார் இன்று அதிகாலை அழைத்துச் சென்றனர். அப்போது அமராவதி ஆற்றுப்பகுதியில் இருவரும் தப்பியோட முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அப்போது தடுக்கி விழுந்ததில் சசிகுமாருக்கு காலிலும், மதனுக்கு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனால், நீதிபதி மருத்துவமனைக்கே நேரில் சென்று இருவரையும் பார்வையிட்டு கரூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவான கபில்குமார் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.