திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் தொடர்கொலைகள், பள்ளி இடைநிற்றல் சிறார்கள் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் திருட்டு, அலைபேசிகள் பறிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக எழுகின்றன.
கடந்த வாரம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதலிபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமாரின் விலை உயர்ந்த நவீன அலைபேசி திருட்டு தொடர்பாக, தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதேபோல், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருடுபோனது தொடர்பாக, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மாதத்துக்கு குறைந்தபட்சம் 4 வாகனங்கள் திருடுபோகின்றன. இதில் கண்டுபிடிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிக, மிக சொற்பம். நிலைமையை உணர்ந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர், தனது வாகனத்தின் பின்புறம், ‘ஐயா மாற்றுத்திறனாளி வாகனம் திருடிவிடாதீர்கள்’ என எழுதியுள்ளார்.
சமீப நாட்களாக திருப்பூர் மாநகரில் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் ஏராளமான கொலைகள், கொலை முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் பலர் திசை மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. இது தொடர்பாக மாநகரை சேர்ந்த சிலர் கூறும்போது, “டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கமும், மருந்தகங்களில் விற்கப்படும் போதை மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
மாநகரில், பல்வேறு காவல் சோதனைச் சாவடிகள் பூட்டிக் கிடக்கின்றன. பல்வேறு மாவட்ட, மாநிலத்தவர்கள் வாழும்பகுதி என்ற போதிலும், போதிய வாகன சோதனைகள் கூட முறைப்படுத்தப்படுவதில்லை. தொடர்ச்சியாக வாகன சோதனை உள்ளிட்ட விஷயங்களை கண்காணிக்கும் போது, திருட்டு, கொலைகள் என பல்வேறு குற்றங்களும் குறைய வாய்ப்புண்டு’’ என்றனர்.
திருப்பூர் மாநகர போலீஸார் கூறும்போது, “அலைபேசி பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக திருப்பூர் மாநகரில் மனு ரசீது மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. அதாவது வழக்கு பதிவு செய்யும்போது, நீதிமன்றம் வரை சென்று பதில் அளிக்க வேண்டியுள்ளது. வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டிய தேவை உள்ளது. தற்போது மனு ரசீது (சிஎஸ்ஆர்) என்றால், காவல் நிலைய அளவிலேயே ஒரே மாதத்தில் முடித்துக் கொள்ளலாம். மாநகரில் போதிய போலீஸார் இல்லாததும், குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்” என்றனர்.
பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏஐடியூசி) சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.சேகர் கூறும்போது, “அனைத்து மாநிலத்தவரும் பணியாற்றும் தொழில் நகரம்தான் திருப்பூர். இந்த நகரை பாதுகாப்பதன் மூலமாகதொழிலும் பாதுகாக்கப்படும். இதை அரசும், போலீஸாரும் கவனத்தில் கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக மது விற்பனையை தடுக்க வேண்டும். இவை தான் பல குற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த பிரவீன்குமார் அபிநபு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் இன்று வரை,பொறுப்பேற்காமல் விடுப்பில்தான் உள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வாழும் திருப்பூரில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கண்காணிப்பதன் மூலமாக பாதுகாப்பாக உணர்வார்கள். குற்றப் பின்னணியில் உள்ள பலரும் இங்கு தஞ்சமடைவது தடுக்கப்படும். மக்கள் சேவையில் கவனம் செலுத்தும் அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே, மாநகரில் அதிகரிக்கும் குற்றங்களும் தடுக்கப்படும்” என்றார்.