சென்னை: முன் விரோதத்தில் எதிர்தரப்பு மாணவர்களை தாக்க, கத்தியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை ராஜாஜிசாலை, கடற்கரை ரயில் நிலையபேருந்து நிறுத்தத்தில் இளைஞர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து, கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களான தண்டையார் பேட்டை சாமுவேல், கும்மிடிப்பூண்டி லோகேஷ், மீஞ்சூர் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகையாக மாறியுள்ளது.
இதனால், அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆயுத தடைச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டரை அடி நீளமுள்ள பெரிய அளவிலான பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.