புதுச்சேரி: சிறையில் கைதிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைக்கும் வகையில் அலைவரிசையை கூடுதலாக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சிறைத் துறை ஜஜி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பயன்படுத்தாத வகையில் செல்போன் சிக்னலை சிறைக்குள் தடை செய்யும் வகையில் சிறப்புக் குழுவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸார் நடத்திய சோதனையில் 2 கைதிகளிடம் செல்போன் இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் செல்போன் சிக்னல் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறை பாதுகாப்பை மீறி கைதிகள் செல்போனை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சிறை வளாகத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத வகையில் புதுவை அரசும், சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறைத் துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர் தலைமையில், அனைத்து கைபேசி நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, சிறை வளாகத்தில் ஜாமர் சாதனத்தை மீறி செல்போன் சிக்னல் கிடைப்பதற்கு சிறைத் துறை தலைவர் அதிருப்தி தெரிவித்தார். அலைவரிசையை கூடுதலாக்கி செயல்படுத்தும் செல்போன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் காலாப்பட்டு, சுனாமி குடியிருப்புகளில் வசிப்போருக்கு செல்போன் சிக்னல் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஜி அறிவுறுத்தினார்.
இதையடுத்து செல்போன் நிறுவனங்களின் அதிகாரிகள் சிறைத் துறை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் சிக்னல் அளவு குறித்த சோதனையை மேற்கொண்டனர். அதன்படி செல்போன் சிக்னல் அளவை குறைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.