சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்தக் கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக நிர்வாகி மகன் மற்றும் அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜகவின் முன்னாள் நிர்வாகியான அஞ்சலை தலைமறைவாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை (48) ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியாகியுள்ளது.