சென்னை: ‘ஆம்ஸ்ட்ராங் போல் கொல்லப் படுவாய்’ என்று மிரட்டல் வருவதாக திமுக நிர்வாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம், ஸ்ரீகிருஷ்ணா நகர், 27-வது தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷவலியுல்லாஹ்(40). இவர் மயிலாடுதுறை திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும், பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவர், விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப் குறுஞ்செய்தி: நான் திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக உள்ளேன். கட்சியில் சிலர், என் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மயிலாடுதுறை சுப்ரமணியபுரம் தாகூர் நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப் போவதாக தனது ‘வாட்ஸ்அப்’பில் மர்ம நபர் குறுஞ்செய்தி வந்தது. மேலும், அந்த குறுஞ்செய்தியில், தகாத வார்த்தைகளால் திட்டிய துடன், சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலைபோல், எனக்கும் நடக்கும் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
குடும்பத்தினருக்கும் மிரட்டல்: அத்துடன், சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டில் வசிக்கும் பெற்றோர் மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் குடும்பத்துக்கும், மர்ம நபர்கள் சென்று மிரட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சென்னையைச் சேர்ந்த 3 பேர் என்னிடம்பணம் கேட்பதோடு, அடியாட்களை வைத்து கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினர்.
எனவே, எனது கட்சி அலுவலகத்துக்கும், வீட்டுக்கும், குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.