க்ரைம்

தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே இரு தரப்புக்கு இடையே மோதலில் இளைஞர் கொலை: 4 பேரை கைது செய்து விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது, இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், இளைஞர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாபு (22). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியப்பா மகன் மோகன்ராஜ்(37) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு, தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் (சரக்கு ரயில் செல்லும் தண்டவாளம்) அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

மதுபோதையில் கூச்சல்: அப்போது, அதே இடத்தில் 2 பேர் மதுபோதையில் சப்தமிட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களை மோகன்ராஜ் எச்சரித்தார். அதற்கு அவர்கள் ஒருமையில் மோகன்ராஜை திட்டினர். இதையடுத்து, அவர்களை அலெக்ஸ்பாபு தட்டிக்கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

ரயில்வே போலீஸ்: அதன் பிறகு, 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து,அலெக்ஸ்பாபு மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியது. இந்ததாக்குதலில் இருவரும் காயமடைந்து கீழே விழுந்தனர்.

இது தொடர்பாக அலெக்ஸ்பாபுவின் தந்தை ராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.ராஜன்அங்கு விரைந்து சென்று இருவரையும் ஆட்டோவில் ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அலெக்ஸ்பாபு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மோகன்ராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார்வழக்குப் பதிவு செய்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்பு என்ற விக்னேஸ்வர்(21), பரத் (18), சஞ்சய் (19), விக்கி (19)ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT