க்ரைம்

சென்னை | 50 ரூபாயை சாலையில் சிதறவிட்டு டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய பிரபல கொள்ளையன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆழ்வார்திருநகர், கைகான் குப்பம், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் பாரதி (23). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மதியம் வங்கியிலிருந்து எடுத்த ரூ.3 லட்சம் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்க டேங்க் கவரில் வைத்துக்கொண்டு, தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் வைத்திருந்த 50 ரூபாயை பாரதியின் அருகே சாலையில் சிதறவிட்டார். பின்னர், அவரிடம் சென்று சாலையில் ரூ.50 கிடப்பதாகவும், அது உங்களுடைய பணமா என கேட்டு பாரதியின் கவனத்தை திசை திருப்பினார். அவர் அந்த 50 ரூபாய் நோட்டை எடுத்தபோது, அந்த இளைஞர், இருசக்கர வாகனத்தின் முன்கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்த பாரதி இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் பாரதியிடமிருந்து ரூ.3 லட்சத்தை திருடியது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ஓ.ஜி. குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (32) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜசேகர் மீது திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு உட்பட 7 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT