க்ரைம்

திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் ரூ.4.68 கோடி கையாடல்: எஸ்.பி.யிடம் நிர்வாக அலுவலர் புகார்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூலை முறையாக வங்கியில்செலுத்தாமல் ரூ.4.68 கோடி கையாடல் நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.யிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார் மனு அளித்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களிடம் வசூலித்த வரிதொகையை மறுநாள் காலை வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இந்த பணியை மாநகராட்சி அலுவலக உதவியாளர் சதீஷ் என்பவர் செய்து வந்தார்.

இவர் சில தினங்கள் விடுப்பில் சென்றபோது, இவருக்கு முன்பு இந்த பணியில் இருந்த அலுவலக உதவியாளர் சரவணன் என்பவர் மாற்றுப் பணியாக பார்த்துள்ளார்.

மீண்டும் சதீஷ் பணிக்கு வந்துகணக்கு வழக்குகளை பார்த்தபோது கணக்கில் ரூ.2 லட்சம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ் புகார் தெரிவித்தார். அதன் பின்பு சரவணன் ரூ.2 லட்சத்தை திருப்பி தந்துள்ளார். இதனால் அப்போதைக்கு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

கணக்கு தணிக்கை: இந்நிலையில் தணிக்கை துறையினர் வருவாய் கணக்குகளை சரிபார்த்துள்ளனர். அப்போது சரவணன் பணியாற்றிய காலத்தில் வங்கியில் பணம் கட்டிய சலானில் வேறுபாடு இருந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து அனைத்து கணக்குகளையும் வாங்கி பார்த்தபோது, வரிவசூலான தொகைக்கும், வங்கியில் செலுத்திய தொகைக்கும் வேறுபாடு இருந்துள்ளது. சிறிது சிறிதாக மொத்தம் ரூ.4.68 கோடி வரை கையாடல் நடந்துள்ளது தெரிய வந்தது.

3 பேர் பணியிடை நீக்கம்: இதையடுத்து உடனடியாக சரவணனை பணியிடை நீக்கம்செய்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் சதீஷும்,இவர்கள் இருவரையும் கண்காணிக்கும் பணியில் இருந்த கண்காணிப்பாளர் சாந்தியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப்பிடம் புகார் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து எந்த ஆண்டிலிருந்து முறைகேடு நடந்துள்ளது என்பதற்கான ஆவணங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை தருமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் போலீஸார் கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT