க்ரைம்

சென்னை | சிபிஐ அதிகாரி போல் பேசி மிரட்டி கட்டுமான அதிபரிடம் பணம் பறிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் கட்டுமான நிறுவன அதிபர் ரமேஷ் பாபு (52). கடந்த 1-ம் தேதி இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தனது பெயர் ராஜேந்திரகுமார் எனவும், தான் சிபிஐ அதிகாரி எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், டில்லியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சத்தை முகமது வாசிம் கான் என்பவருக்கு நீங்கள் கடன் வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். அந்த பணம் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் என மொத்தம் இதுவரை 25 பேரைக் கைது செய்துள்ளோம்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திலிருந்து உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி மிரட்டியுள்ளார். ரமேஷ்பாபுவை நம்ப வைப்பதற்காக போலி சிபிஐ அடையாள அட்டை, மத்திய அரசின் நிதித்துறை கடிதம் ஆகியவற்றை அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

மேலும், குடும்பத்தினர் விவரம்? என்ன தொழில் செய்கிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாகத் தொழில் செய்கிறீர்கள்? எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்கள்? என சுமார் 2 மணி நேரம் போனிலேயே விசாரித்துள்ளார்.

அதற்கு ரமேஷ் பாபு எனக்கு ஒரே ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு உள்ளது. அதிலும் ரூ. 64 ஆயிரம் மட்டுமே உள்ளது என பதில் அளித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த நபர், இதை நான் நம்ப வேண்டும் என்றால் நான்கூறும் வங்கிக் கணக்குக்கு ரூ.64ஆயிரம் அனுப்பி வையுங்கள். நீங்கள் குற்றவாளி இல்லை என்று உறுதியானால் அந்தப் பணம் உங்களுக்கு திரும்பக் கிடைத்துவிடும் எனத் தெரிவித்தார்.

இதனால், பயந்து போன ரமேஷ் பாபு, சிபிஐ அதிகாரி என மிரட்டிய நபர் கூறிய வங்கி எண்ணுக்கு அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் சிபிஐஎன மிரட்டியவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ் பாபு இதுகுறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT