மதுரை: திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (40). இவர் மதுரைமாவட்டம் சமயநல்லூர் அருகில் உள்ள நகரியில் செயல்படும் மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்தார். மக்களவைத் தேர்தலின்போது, வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் பதிலி ஓட்டுநராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்களை நேற்று முன்தினம் தொடர்புகொண்ட விக்னேஷ்குமார், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் சோதனையை நிறுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த சிலர்,சோதனை உண்மையா என்று வருமான வரித் துறை அலுவலகத்தில் விசாரித்தனர். இதையறிந்த மதுரை வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் புஷ்பராஜ், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, நகரிமறுவாழ்வு மையத்தில் இருந்த விக்னேஷ்குமாரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் இதேபோல பலரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.