க்ரைம்

குஜராத் | மாநகராட்சி அதிகாரி வீட்டில் ரூ.18 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கம் சிக்கியது

செய்திப்பிரிவு

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம் ஜோன்’ என்ற பெயரில் சிறார்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு மையம் இயங்கி வந்தது. இதில் கடந்த மே 25-ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அனுமதியின்றி விளையாட்டு மையம் இயங்கி வந்தது தெரியவந்தது.

தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி எம்.டி.சாகத்தியா உள்ளிட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர். சாகத்தியா மீது கடந்த மாதம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சாகத்தியா வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் சாகத்தியாவின் சகோதரர் பெயரில் இயங்கி வந்த ஓர் அலுவலகத்தில் இருந்து, ரூ.15 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகள், நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ரூ.8.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், ரூ.3 கோடி ரொக்கம், ரூ.1.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்த அலுவலகம் சாகத்தியாவின் சகோதரர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது சாகத்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT