சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ - மாணவியருக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். நேற்று மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை இமெயில் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் போலீஸார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பின்பு வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சோதனையை முடித்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
ஏற்கெனவே அடிக்கடி இமெயில் மூலம் இதுபோன்று போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் அந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் மிரட்டல் விடுத்தார்களா அல்லது கல்லூரி மாணவர்கள் யாரேனும் பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.