சென்னை: கோடிக் கணக்கில் கடன் பெற்றுத் தருவதாக கூறி தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில தொழில் அதிபர்களை நம்ப வைத்து ‘சதுரங்க வேட்டை’ சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சனிவரப்பு வெங்கடசிவ ரெட்டி. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கும்பல் ஒன்று தனக்கு ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி முன் பணமாக ரூ.2 கோடி பெற்று தலைமறைவாகி விட்டது. அக்கும்பல் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி, துணை ஆணையர் நிஷா மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடிக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதய கிருஷ்ணா என்ற முகமது தாவூத்கானை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கார், விலை உயர்ந்த 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோசடி கும்பல் பற்றி இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட முகமது தாவூத்கான் தமிழ்நாடு மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம் தான் ஒரு பெரிய பைனான்சியர் என்று நம்ப வைத்து ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை கடன் ஏற்பாடு செய்வதாக கூறி, நம்ப வைத்து அதற்கு 10 சதவீதத்தை முன் பணமாக பெற்றுக் கொள்வார். இப்படி, இதுவரை ரூ.15 கோடிவரை பெற்று இக்கும்பல் மோசடி செய்துள்ளது.
இது போன்று முகமது தாவூத்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சென்னையில் 7, தாம்பரத்தில் 4, ஆவடியில் 1 வழக்கு, மகாராஷ்டிராவில் 5 வழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் 1 வழக்கு உள்ளது. அனைத்து வழக்குகளிலும் முகமது தாவூத்கான் போலீஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார். முகமது தாவூத்கான் கூட்டாளிகள் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் ‘சதுரங்க வேட்டை’ சினிமா பாணியில் இப்படி ஆசையை தூண்டி பண மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள முகமது தாவூத்கானை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.