பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்துக்கு தடையின்மை சான்று வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியபோது, நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர், அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, துணை வட்டாட்சியர் பழனியப்பன், கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினர்.
இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அவரை பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, உரிய சிகிச்சை அளித்து, மறுநாள் காலை (நேற்று) விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தினர்.
மேலும், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பழனியப்பன், பெரம்பலூர் அரசுதலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புபோலீஸாரிடம் விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக வட்டாட்சியர் சரவணன் நேற்று காலை அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, பழனியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
வட்டாட்சியர் அறிக்கை: மருத்துவ சிகிச்சையில் இருந்த பழனியப்பன் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், தப்பிச் சென்றுவிட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு, வட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து, தப்பியோடிய துணை வட்டாட்சியர் பழனியப்பனை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.