சென்னை: தந்தையின் மருத்துவச் செலவுக்காக சுங்கத் துறை ஆய்வாளர் ஒருவர் வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34).சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கிபாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறைஅலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர்.
புஷ்பந்தரா அண்ணாநகர் 5-வது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தினார். வங்கி ஊழியர்கள் பணத்தை சோதித்துப் பார்த்தபோது, 500 ரூபாய் கரன்சியில் 6 கள்ள நோட்டுகள் இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து அவர்களது மேலாளரிடம் தெரிவித்தனர். அவர் அண்ணா நகர் போலீஸாருக்கு தெரிவித்தார். மேலும், புகாரும் அளித்தார்.
இதையடுத்து, போலீஸார் சுங்கத் துறை ஆய்வாளர் புஷ்பந்தராவிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ராஜஸ்தானில் வசித்து வரும் ஆய்வாளர் புஷ்பந்தராவின் தந்தை சிவசங்கர் சர்மாவுக்கு திடீர்உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருந்ததால் மருத்துவச் செலவுக்காக புஷ்பந்தரா தனது மனைவி வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய சென்றதும், அதில் 6 கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, புஷ்பந்தராஅந்த 5 லட்சம் ரூபாயை தன்னுடைய நண்பர்களிடமிருந்து கடனாக வாங்கியதாகவும், அதில் இந்த கள்ள நோட்டு இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் சுங்கத் துறை ஆய்வாளர் புஷ்பந்தரா யார் யாரிடம் கடன் வாங்கினார் என்பது குறித்தும், கள்ள நோட்டுகள் எப்படி வந்தன என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நண்பர்களிடமிருந்து கடனாக வாங்கியரூ.5 லட்சத்தில் கள்ள நோட்டு இருந்திருக்கலாம் என புஷ்பந்தராகூறியுள்ளார்.