தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருள், ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
க்ரைம்

சென்னை | ரூ.40 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலை சேர்ந்தவர் உட்பட 9 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதி முகாமில் வசிக்கும், இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 2 பேரை அண்மையில் கைது செய்து, ஒன்றரை கிலோ மெத்தம்பெட்டமைனை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை புழல் சிறையில் உள்ள சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த காசிலிங்கம் மூலம்தான் இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்துவதற்கு உதவிய காசிலிங்கத்தின் மனைவி கிருஷ்ணகுமாரி, கூட்டாளி முகம்மது ரிஸாலுதீன் ஆகிய 2 பேரையும் சென்னையில் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து அமெரிக்க டாலர், இலங்கை ரூபாய் நோட்டுகள் உட்பட ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதோடு ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருக்கும் காசிலிங்கமும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

பீட்டர்ஸ் சாலையில்.. மற்றொரு சம்பவத்தில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தினர். இச்சோதனையில், அவர்கள் வைத்திருந்த 2.700 கி. மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், மெத்தம்பெட்டமைனை மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இரு வழக்குகளிலும் மொத்தம் ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையை சேர்ந்த 3 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள காசிலிங்கம், சிறைக்குள் இருந்து கொண்டே, போதைப் பொருள் கடத்தல் கும்பலை இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT