புதுச்சேரி: வங்கிக் கணக்கில் ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்க் வந்து, அதை கிளிக் செய்ததால், புதுச்சேரியில் ஒரு வாரத்தில் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளனர். எனவே, அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் தெரிவித்தார்.
வங்கி கணக்கில், ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்துவைத்து நடக்கும் மோசடி புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.15 லட்சம் அளவுக்கு இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் கூறியது: “வங்கியில் இருந்து அனுப்புவது போன்ற மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் மர்மமான மற்றும் மோசடியான (PHISHING) இணைப்புகளை அனுப்பி கிளிக் செய்ய வைக்கிறார்கள்.
பேராசையில் அதனை கிளிக் செய்தால் வங்கி தகவல்களை திருடி,பணத்தையும் திருடி விடுவார்கள். எனவே கவனமாக இருந்து சந்தேகமான லிங்க் எதையும் கிளிக் செய்யக் கூடாது.எந்த வங்கியும் இதுபோன்ற லிங்குகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில்லை. எனவே, பொதுமக்களுக்கு வரும் மெசேஜ் மற்றும் லிங்கின் உண்மை தன்மையை தெரியாதவர்கள், அருகிலுள்ள தங்களது வங்கி கிளைக்கு சென்று விசாரிப்பதே சிறந்தது. இதை மீறினால் பணமிழப்பு அபாயம் அதிகம் ஏற்படும்.
மோசடி செய்பவர்கள் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சர்ச் என்ஜின்களை பயன்படுத்திகூட வாடிக்கையாளர்களை ஏமாற்றி, முக்கியத் தவல்களை திருட்டுத்தனமாக சேகரிக்கிறார்கள். எனவே, அதிகாரபூர்வமற்ற இணையதளங்களில் நுழையாமல் இருப்பது நல்லது.
எனவே சற்றும் யோசிக்காமல் மர்மான லிங்குகளை கிளிக் செய்வது, முன் பின் தெரியாத நபர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசினால், அந்த நபர்கள் குறித்து விசாரிக்காமல் நம்முடைய வங்கி விபரங்களை பகிர்வது, சமூக வலைத்தளங்களில் அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்களை பயன்படுத்தி லோன் எடுப்பது, வீட்டில் இருந்தே வேலை லைக் செய்தால் போதும் பணம் தருகிறோம் என்று கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிக்ராமில் வரும் செய்திகளை நம்பி பணத்தை முதலீடு செய்வது, முன்பின் தெரியாத மர்ம நபர்கள் கூறும் ஆசை வார்த்தையை நம்பி அங்கீகரிக்க படாத டிரேடிங் ஆப்களை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்வது போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.
குறிப்பாக OTP என்ற வார்த்தை வந்தவுடன் சற்றும் யோசிக்காமல் அதிலிருந்து விலகி விடுவது சாலச்சிறந்தது. மேலும் சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் சற்றும் நேர விரயம் செய்யாமல் இலவச அழைப்பு எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்,” என்றார்.