பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

விடுப்பு தர மறுத்ததால் ஆத்திரம்: தீயணைப்பு நிலைய அலுவலர் பைக்கை எரித்த வீரர்கள் கைது

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விடுப்பு தர மறுத்ததால் ஆத்திரமடைந்து, நிலைய அலுவலரின் பைக்கை எரித்த தீயணைப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணிபுரிபவர் வேல்முருகன் (54). இதே நிலையத்தில் தீயணைப்பு படை வீரர்களாக குமரேசன் (30), அருள்பிரகாஷ் (37) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 26-ம் தேதி குமரேசன், அருள்பிரகாஷ் ஆகியோர் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகனிடம் சென்று, தங்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், அருள்பிரகாஷ் ஆகியோர், கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிலைய அலுவலரின் குடியிருப்பில், வேல்முருகன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்துச் சென்று, பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பகுதியில் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயமானது தொடர்பாக, பண்ருட்டி காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். இதனிடையே, கெடிலம் ஆற்றுப்பகுதி வழியாகச் சென்றவர்கள், பைக் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு பண்ருட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அங்கு சென்று பைக்கை கைப்பற்றி வந்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பைக் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகனுடையது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் குமரேசன், அருள்பிரகாஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது, தாங்கள் பைக்கை எரித்ததை ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT