சேலம்: சேலத்தின் பல்வேறு இடங்களில், மது பாட்டில்களை பதுக்கி, சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற மூதாட்டிகள் உள்ளிட்ட 9 பெண்கள் உள்பட 21 பேர் இன்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரைத் தடுக்க, போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையில், மதுவை பதுக்கி விற்க முயன்ற மூதாட்டிகள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தை அடுத்த பூலாவரியில் 7 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த முருகேசன் (49) என்பவரை கொண்டலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியில் 8 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ராஜலட்சுமி (37), 11 மது பாட்டில்களை வைத்திருந்த பொன்னம்மாபேட்டை ராஜசேகர் (43), 8 மது பாட்டில்களை வைத்திருந்த பொன்னம்மாபேட்டை கண்ணன் (50) ஆகியோரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த காரிப்பட்டியில், அருநூற்றுமலையை அடுத்த சிறுமலை என்ற இடத்தில் 42 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் எடுத்து வந்த சிறுமலையைச் சேர்ந்த பொன்னுசாமி (32) என்பவரை கைது செய்த காரிப்பட்டி போலீஸார், மது பாட்டில்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சேலம் பெரமனூரில் 12 மது பாட்டில்களை வைத்திருந்த மாதேஸ்வரன் (66), 14 மது பாட்டில்களை வைத்திருந்த பள்ளப்பட்டி பெரியேரி வயக்காடு பகுதி வெங்கடேஷ், 22 மது பாட்டில்களை வைத்திருந்த பள்ளப்பட்டி ராவணேஸ்வரர் நகர் பாபு (48) ஆகியோரையும் பள்ளப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் அருகே 5 மது பாட்டில்களை வைத்திருந்த ஜாகீர் அம்மாபாளையம் சாந்தி (54), 6 மது பாட்டில்களை வைத்திருந்த ஜாகீர் அம்மாபாளையம் மூதாட்டி மருதாயி (75), 5 மது பாட்டில்களை வைத்திருந்த சூரமங்கலம் ரெட்டிப்பட்டி அம்சா (50) ஆகியோரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இதேபோல், சூரமங்கலம் அருகே கந்தம்பட்டியில் 5 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெருமாள் (62), 5 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நரசோதிப்பட்டியைச் சேர்ந்த அமுதா (50) ஆகியோரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
ஜாகீர் ரெட்டிப்பட்டியை சேர்ந்த முனியம்மாள் (82) என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். மேலும், சூரமங்கலம் அருகே சோளம்பள்ளத்தைச் சேர்ந்த லட்சுமி (65), கணேசன் (49) ஆகியோரிடம் இருந்து மொத்தம் 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களையும் சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த சுமதி (50), முனியம்மாள் (65) ஆகியோரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த கோபி (48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். சேலம் வீராணத்தை சேர்ந்த ஆனந்தன் (62) என்பவரிடம் இருந்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மது விலக்கு போலீஸார் அவரை கைது செய்தனர். இதேபோல், சூரமங்கலம் அருகே பழையூரைச் சேர்ந்த மொழுக்கன் (75) என்பவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மது விலக்கு போலீஸார், அவரை கைது செய்தனர்.
சேலம் சுவர்ணபுரியைச் சேர்ந்த இமயவரம்பன் (49) என்பவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மது விலக்கு போலீஸார், அவரை கைது செய்தனர். இப்படி சேலம் மாநகரில் ஒரே நாளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.