க்ரைம்

திருடன் என கருதி கொலை: அலிகரில் பதற்றம், 6 பேர் கைது

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அலிகர் நகரின் முக்கியப் பகுதியில் மாமு பாஞ்சாஎன்ற பெயரில் மின்னணு பொருட்களின் சந்தை மற்றும் சில துணிக்கடைகள் அமைந்துள்ளன. இங்குமுகேஷ் சந்திர மித்தல் என்பவர்துணிக் கடை நடத்துகிறார். இதன்முதல் மாடியில் அவரது குடியிருப்பு உள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை வார விடுமுறை என்பதால் கடைகள் மூடப்பட்டிருக்க, அருகிலுள்ள படிகள் வழியாக இளைஞர் ஒருவர் முதல் மாடி குடியிருப்பில் நுழைய முயன்றுள்ளார். அவரை திருடன் என கருதி மித்தலின் மகன் ராகுல் பிடித்துள்ளார். பிறகு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர், மருத்துவமனைக்கு செல்லப்படும் வழியிலேயே இறந்தார்.

கொல்லப்பட்ட இளைஞர் முகம்மது பரீத் என்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை முன்பு அப்பகுதி முஸ்லிம்களுடன் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அங்குஇரு சமூகத்தினர் இடையே உருவான பதற்றம் நேற்று 2-வதுநாளாகவும் நீடித்தது. கடைகளும்அடைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மித்தலின் மகன்ராகுல், அவரது நண்பர் ரோகித்உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அங்கு பதற்றம் தணியவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என அலிகரின் இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலமும், ஆர்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில் அலிகர் நகர பாஜக எம்எல்ஏமுக்தா சஞ்சீவ் ராஜா மற்றும் அவரது கட்சியின் நகர மேயரான பிரஷாந்த் சிங்காலும் கலந்து கொண்டனர். இதைக் காண அப்துல் கரீம் நான்கு சாலை சந்திப்பில் முஸ்லிம்களும் கூட, அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் சூழல் உருவானது.

அலிகரில் நேற்று முதல் செப்டம்பர் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முஹர்ரம், ரக் ஷா பந்தன், சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி ஆகிய முக்கிய நாட்களில் பொது இடங்களில் மக்கள் கூட முடியாது.

SCROLL FOR NEXT