க்ரைம்

தோழிக்காக ரசிகரை உதைத்து கொன்ற நடிகர் தர்ஷன்: அப்ரூவர் ஆன நெருங்கிய நண்பர் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன் (47), நடிகை பவித்ரா கவுடாவை காதலிப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பவித்ரா கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களது உறவு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததாக பதிவிட்டிருந்தார். அதற்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சித்ரதுர்காவை சேர்ந்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி (33), தர்ஷனை விட்டு விலகிச் செல்லுமாறும், அவரது குடும்பத்தை சீரழிக்க வேண்டாம் எனவும் ப‌வித்ரா கவுடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதனால் கோபமடைந்த பவித்ரா கவுடா, ரேணுகா சுவாமிக்கு தக்கப் பாடம் புகட்டுமாறு தர்ஷனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தர்ஷன் ஜூன் 8-ம்தேதி சித்ரதுர்கா மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா மூலம் ரேணுகா சுவாமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு தர்ஷன், தோழி பவித்ரா கவுடா முன்னிலையில் ரேணுகா சுவாமியை வினய் கவுடா, நாகராஜ், பவுன்ஸர்கள் கார்த்திக், பவன், நந்தேஷ், நிக்கி நாயக், லட்சுமன், பிரதோஷ் உள்ளிட்ட 13 பேர் கடுமையாக தாக்கினர். இதில் உயிரிழந்த‌ ரேணுகா சுவாமியின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசினர்.

தகவல் அறிந்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடன் தராததால் ரேணுகா சுவாமியை கொன்றதாக 4 பேர் சரண்டர் ஆகினர்.

போலீஸார் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தபோது, நடிகர் தர்ஷன் கூறியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் குற்றம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ரேணுகா சுவாமியை கடத்தி வருவது, அவரை சம்பவ இடத்துக்கு கொண்டு செல்வது, சடலத்தை கால்வாயில் வீசுவது, கொலை செய்த இடத்தில் இருந்து தர்ஷனின் கார் வெளியே செல்வது ஆகியவற்றின் சிசிடிவி காட்சி ஆதாரங்கள் சிக்கின.

இதையடுத்து போலீஸார் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேரையும் கைது செய்தனர். இதனிடையே ரேணுகா சுவாமியை பெங்களூருவுக்கு கொண்டுவர காரணமாக இருந்த கார் ஓட்டுநர் ரவியை கைது செய்தனர்.

இந்த கொலையில் நேரடியாக தொடர்பில் இருந்த தர்ஷனின் நெருங்கிய நண்பர் தீபக் அப்ரூவராக மாறியுள்ளார். அவரது வாக்குமூலத்தில் கூறியதாவது:

ரேணுகா சுவாமி இன்ஸ்டாகிராம் மூலம் பவித்ரா கவுடாவை திட்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் தனது ஆண் உறுப்பை படம் எடுத்து அதனை அவருக்கு அனுப்பியுள்ளார். அதனால் கோபமடைந்த பவித்ரா கவுடா தர்ஷனிடம் முறையிட்டு, ரேணுகா சுவாமிக்கு பாடம் புகட்டுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து தர்ஷன் தன் நண்பர்கள் மூலம் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தார். பவித்ரா கவுடா முன்னிலையிலே சரமாரியாக தாக்கினார். தனது பெல்ட்டை கழற்றி அவரை அடித்தார். அதனால் சுருண்டு விழுந்த ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் எட்டி உதைத்தார். இதன் காரணமாக அவர் மயங்கினார்.

இந்த கொலையில் அவரது பெயரை மறைக்க ரூ.30 லட்சம் பேரம் பேசப்பட்டது. அவரது வழிகாட்டுதலின்படி போலீஸில் சரண்டர் ஆன நிகில் நாயக், ராகவேந்திரா, கார்த்திக், கேசவமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுத்தேன். மீதமுள்ள பணத்தை அவர்களின் குடும்பத்தினருக்கு தர திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் தர்ஷன் போலீஸில் சிக்கிவிட்டார். இவ்வாறு தீபக் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

SCROLL FOR NEXT