சாத்தூர்: சாத்தூர் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டா்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தை வேலு (28). டெல்லியில் இந்திய ராணுவத்தில் கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குழந்தை வேலு அதற்கு பணம் தேவைபட்டதால், ஆலங்குளம் அருகே டி.கரிசல்குளத்தில் உள்ள சத்யராஜ் என்பவர் வீட்டில் கடந்த 7ம் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சத்யராஜ் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது ராணுவ வீரர் குழந்தை வேலு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக குழந்தை வேலுவை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்தனர்.
மேலும், திருடிய நகையை குழந்தை வேலு சங்கரன்கோவில் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அந்த நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் குழந்தை வேலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.