க்ரைம்

கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது @ திருநெல்வேலி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையாரும், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வனும் உரையாடும் ஆடியோ சில நாட்களுக்குமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக வளர வேண்டுமெனில், தமிழகத்தில் கலவரம் செய்ய வேண்டும் என்று உடையார் பேசுவதுபோல அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கலவரத்தை தூண்டும் விதமாக ஆடியோ வெளியிட்டதாக, உடையார் மீது பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் துரைப்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், மத ரீதியான பிரச்சினையைத் தூண்டியது, பொது அமைதியைக் குலைத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், உடையார் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம்: இதனிடையே, கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உடையார் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவின் உள் விவகாரங்களில் தலையிடுவது, இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது.

இந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள உடையார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT