உதகை ரோஜா பூங்கா சந்திப்பு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 
க்ரைம்

உதகை ரோஜா பூங்கா சாலையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை ரோஜா பூங்கா சாலையில், கர்நாடக சுற்றுலா பயணிகளுடன் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்த ஆண்டு கோடை சீசன் களை கட்டியதால் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

தமிழகம் உட்பட பல இடங்களிலும் இதுவரை பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதால், கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை உதகைக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 14 சுற்றுலா பயணிகள் டெம்போ ட்ராவலர் வேனை வாடகைக்கு எடுத்து இன்று உதகையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். வழக்கம்போல இன்று காலை ரோஜா பூங்காவை கண்டு ரசித்து விட்டு மீண்டும் படகு இல்லம் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது ரோஜா பூங்கா சந்திப்பு சாலையில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று, முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, அதற்குப் பின்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதி சாலையின் கீழே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் மோதியதில் ஆட்டோக்களும் பள்ளத்தில் கவிழ்ந்தன. மேலும் காரும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்றது. முக்கிய சந்திப்பு பகுதியில் நடந்த இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் போலீஸார் சாலையில் கவிழ்ந்த டெம்போ ட்ராவலர் வேனில் இருந்தவர்களையும் ஆட்டோ ஓட்டுனர்களையும் மீட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த 2 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டெம்போ ஓட்டுநர் என 3 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதகை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்பாட்டை இழந்த வேன் கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதாமல் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அல்லது நடந்து வந்தவர்கள் மீது மோதி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

SCROLL FOR NEXT