சென்னை: சென்னை அரும்பாக்கம், பீட்டர்ராஜா தெருவில் வசித்து வருபவர் ஆனஸ்ட்ராஜ் (24). இவர் தனது உறவினர் பட்டூர், மாங்காடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்ராஜ் (22) மற்றும் நண்பருடன் அமைந்தகரை மார்க்கெட் அருகிலுள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தச் சென்றார்.
அப்போது ஆனஸ்ட்ராஜ், பாரில் வேலை செய்துவரும் சிவகங்கை ராஜேந்திரன் (34) மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் (34) ஆகியோரிடம் ``என்னிடம் பணமாக இல்லை. `ஜிபே' மூலம்பணம் அனுப்புகிறேன். மதுபாட்டில் எடுத்து வா'' எனக் கூறியுள்ளார்.
பார் ஊழியர்கள் இருவரும், ``ஜிபே செய்தால் மதுபாட்டில்கள் தரமாட்டார்கள்; பணமாக கொடுங்கள்'' எனக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆனஸ்ட்ராஜ் மற்றும் பிரதீப்ராஜ் ஆகியோர் பார் ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் பாலசுந்தரத்தை கையால் தாக்கியுள்ளனர்.
உடனே, பார் ஊழியர்கள் இருவரும் மேசையிலிருந்த மதுபாட்டில்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆனஸ்ட்ராஜ், அவரது சகோதரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் பதில் தாக்குதலில் பார் ஊழியர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த இரு தரப்பும் போலீஸில் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பார் ஊழியர்கள் ராஜேந்திரன், பாலசுந்தரம், பிரதீப்ராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.