கோவை: கோவை துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் ஒரு கும்பல், வாட்ஸ்-அப் மூலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குப் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(39), பிரதீப் (34) வெள்ளக்கிணறு சதீஷ்குமார்(39), நல்லாம்பாளையம் ஆதீஷ்கண்ணன்(28) ஆகியோரை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கும்பலின் தலைவர்களான வினோத்குமார், பிரபு ஆகியோர், வாட்ஸ்-அப் மூலமாக கேரளா, நாகாலாந்து லாட்டரிகளை விற்றுள்ளனர். ஒரு ஏரியாவுக்கு ஒரு குழு என 92 வாட்ஸ்-அப் குழுக்களை அமைத்து, லாட்டரிச் சீட்டுகளை விற்றுள்ளனர். இதற்கு ஏஜென்ட்-களையும் பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1.61 லட்சம் ரொக்கம், கார், 5 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 96 லாட்டரிச் சீட்டுகள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி பிரபுவின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.18லட்சம் முடக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம்’’ என்றனர்.