தென்காசி: ஆலங்குளம் அருகே போலீஸாரை வெட்ட முயன்ற ரவுடியை போலீஸசார் இன்று கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலார்குளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த மகேஷ் (25), இவரது சகோதரர்கள் பெர்லின், கஜேந்திரன் (22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (27) ஆகியோரை ஆலங்குளம் போலீஸார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆலங்குளம் பேருந்து நிலைய பகுதியில் அன்று இரவு ஆலங்குளம் போலீஸார் தங்கதுரை, ஜான்சன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் அண்ணன் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல் ஆகியோர் போலீஸாரிடம் தகராறு செய்து, அரிவாளால் அவர்களை வெட்ட முயன்றனர். இதில் இருவரும் தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் தங்கதுரை லேசான காயமடைந்தார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் போலீஸாரை விரட்டி விரட்டி வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரம் (27) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த நிர்மல்(28) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.