சென்னை: சிறுமிகளை வஞ்சித்து பாலியலில் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்த வழக்கில் மேலும் ஒரு பெண்ணை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய்நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாலியல் புரோக்கர் தேனாம்பேட்டை நதியா, சுமதி, மாயஒலி, தி.நகர் ராமச்சந்திரன், வளசரவாக்கம் அசோக்குமார், மேற்கு சைதாப்பேட்டை ரமணிதரன் உட்பட 7 பேர்அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
மேலும், தொடர் விசாரணையில் தி.நகரில் ஓட்டல் மேலாளராக பணியாற்றி வந்த தண்டபாணி என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல்செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 2 சிறுமிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் புரோக்கர்களாக செயல்பட்ட மறைமலை நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை மூளைச் சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளிஅதனை வீடியோ எடுத்து மிரட்டிஅடுத்தடுத்து அவர்களை இதில்ஈடுபட வைத்துள்ளது தெரிய வந்தது. சிறுமிகளை பாலியல் கும்பல்வெளிநாட்டு விஐபிக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மூலமும் பாலியல் தொல்லைகளை அளித்தார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது.