காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி திருமலைராஜன் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஒயிட்ஹவுஸ் காலனியை சேர்ந்த சிங்காரவேல் மகன் சந்தோஷ்(13), கடந்த 27-ம்தேதி ஒரு வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
நிரவி போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஆன்லைன் மூலம் கத்தி, கையுறைகளை வாங்கி, இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மயிலாடுதுறை அருகே வடகரை பகுதியில் தனது உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுவனை போலீஸார் நேற்று முன்தினம் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது, 17 வயது சிறுவன் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதை சந்தோஷ் தட்டிக் கேட்டதால், அவரை அச்சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து17 வயது சிறுவனை கைது செய்து,காரைக்கால் மாவட்ட சிறார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.