க்ரைம்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் - ‘ரூட் தல’ விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ‘ரூட் தல’ விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியிலிருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யாராவது ஒருவர் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாள நினைத்தால் அவர் ‘ரூட் தல’ என்று கூறப்படுகிறார். குறிப்பிட்ட அந்த வழியில்ரூட்டு தல யார் என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.

இந்த ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது இருதரப்பாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்தமோதலை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அறிவுரை கூறியும் கேட்காமல் இருக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

மேலும், அவர்கள் கல்லூரியிலிருந்து நிரந்தரமாகவும் நீக்கப்பட்டும் வருகின்றனர். இருப்பினும் மாணவர்களிடையே இந்த மோதலைமுற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினமும் தேர்வு நடைபெற்றுள்ளது.

மதியம் 12.30 மணியளவில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அறை முன்பு பூந்தமல்லி ரூட்டை (பேருந்து வழித்தடம்) சேர்ந்த பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் பீட்டர் (21) என்ற மாணவரை பாரிமுனை பேருந்து ரூட்டை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர் உட்பட மேலும் சிலமாணவர்கள் சேர்ந்து அரிவாள்போன்ற ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் மாணவர் பீட்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விவகாரம் குறித்து போலீஸாருக்கு யாரும் தகவல்தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இந்த மோதல் விவகாரத்தை அறிந்த போலீஸார் சம்பவ இடம்விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கல்லூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு மோதல்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் துளசி நாதன்(21). இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொண்ட கும்பல் துளசி நாதனை தாக்கி உள்ளது.

இது தொடர்பாக அமைந்தகரை போலீஸார் சிறுவன் உள்பட 4 பேரைக் கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் என்ற பரத்ராஜ் (25) சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (21) ஆகியோர் புழல் சிறையிலும், 2 சிறுவர்கள் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT