சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்த இளம் பெண்ணுடன் சமரசமாகி விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி கோயில் பூசாரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கோயிலில் பூசாரியாக இருக்கும் கார்த்திக் முனுசாமி (46) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிபாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரியும் சாலிகிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கார்த்திக் முனுசாமி மீது பாலியல் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். இதையடுத்து ஜாமீன் வழங்கக்கோரி கார்த்திக் முனுசாமி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தனக்கும், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. தனக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை என உறுதியளித்து அந்த பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, தனக்கு முன்ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமிசார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, சென்னைஉயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக் முனுசாமி கைதுசெய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, முன் ஜாமீன் மனு செல்லாததாகி விட்டதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.