க்ரைம்

காரைக்கால் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்காலில் வீட்டின் அருகே சிறுவன் கழுத்து அறுபட்டு, உடலில் மேலும் பல காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் நிரவி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட திருப்பட்டினம் திருமலைராஜன் ஆற்றுப் பாலம் அருகேவுள்ள ஒயிட் ஹவுஸ் காலனியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13). இவர், நேற்று (மே 27) மதியம் சக நண்பர்களோடு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென மாலை சிறுவனை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர்கள் சிறுவனை தேடி வந்த நிலையில், இரவு வீட்டின் அருகே சிறுவன் கழுத்து அறுபட்டு, உடலில் மேலும் பல காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

சிறுவனின் உடலை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து நிரவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவ இடத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட முதல் நிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று, சிறுவனின் உடலை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, சிறுவனின் வீட்டின் அருகே வசிக்கும் மற்றொரு 18 வயது மதிக்கத்தக்க சிறுவன் மற்றும் அச்சிறுவனின் குடும்பத்தார் திடீரென மாயமாகி இருப்பதாகவும், இந்த கொலைக்கும் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT